40 கிமீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, போக்குவரத்து போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். உடன் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உள்ளிட்டோர்.
கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, போக்குவரத்து போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். உடன் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ. வேகத்தை தாண்டி ஓட்டினால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க 10 இடங்களில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டம் ஒன்று சோதனை அடிப்படையில் சென்னையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததால் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சீர் செய்யும் திட்டத்தை போக்குவரத்து போலீஸார் நேற்று முதல் செயல்படுத்த தொடங்கினர்.

இதன் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது: கூகுள் வரைபடம் மூலம் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் வரைபடம் மூலம் எந்தெந்த இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது என்ற விவரங்களை சேகரித்து அதை செயல்படுத்த புதிய செயலி ஒன்றை காவல் கட்டுப்பாட்டு அறையில் உருவாக்கி உள்ளோம்.

அந்த செயலி மூலம் அறிந்து போக்குவரத்து நெரிசல் உடனடியாக சரி செய்யப்படும். கூகுள் நிறுவனத்துக்கு இதற்காக ஆண்டுக்கு ரூ.96 லட்சம் கொடுக்கப்படும். இதேபோல் சென்னையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையும் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ‘ஸ்பீடு ரேடார் கன்’ என்ற நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.

சென்னையில் தற்போது வாகனங்களின் வேகம் பகலில் 40 கி.மீட்டர் (காலை 7 முதல் 10 மணி), இரவு 50 கி.மீட்டருமாக (இரவு 10 முதல் காலை 7 மணி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதத் தொகை செலான் அனுப்பி வைக்கப்படும். 30 சாலை சந்திப்புகளில் ஸ்பீடு ரேடார் கன் கருவியை பொருத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பாரிமுனை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, புல்லா அவென்யு, ஈஞ்சம்பாக்கம் உள்பட 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சாலை சந்திப்புகளில் விரைவில் பொருத்தப்படும். சிக்னல்களை நவீனப்படுத்த அரசு ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது. அதில் முதல் கட்டமாக 68 சிக்னல்களை நவீனப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் மயில்வாகனன், துணை ஆணையர்கள் சரவணன், சக்திவேல், சமய்சிங் மீனா, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in