Published : 14 Oct 2017 10:00 AM
Last Updated : 14 Oct 2017 10:00 AM

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும்: ஜாக்டோ - ஜியோ கிராப் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றங்களை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ (கிராப்) நிர்வாகிகள் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்று, ஊதிய மாற்றத்தை கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ (கிராப்) அமைப்பின் நிர்வாகிகள் இரா.சண்முகராஜன், பெ.இளங்கோவன், ஜெ.கணேசன், கே.கணேசன் உள்ளிட்டோர் முதல்வர் கே.பழனிசாமியை நேற்று காலை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நிலுவைத்தொகையை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 2016 ஜனவரி 1-ம் தேதியை கருத்தியலாகவும், 2017- அக்.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதை கேட்டு எதிர்பாராத அதிர்ச்சியில் உள்ளனர். எனவே, 19 லட்சம் பேரின் உணர்வுகளை எண்ணி, ஊதியக்குழு நிலுவைத்தொகையை மத்திய அரசு போல் அறிவிக்க வேண்டும்.

மேலும், 6-வது ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் இதிலும் களையப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. இதனால் ஊதிய இழப்பு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முரண்பாடுகளைக் களைந்து திருத்திய ஊதியத்தை அறிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 என்பதை ரூ.18,000 என நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், படிகள், இதர பணப்பயன்களையும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x