

திருச்சி: மூன்றாம் பாலினத்தவர்களுக்கென சுயஉதவிக் குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில், திருச்சியில் நேற்று நடைபெற்ற உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து, உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, ஓரிட சேவை மையத்தின் ‘மதி சிறகுகள்’ இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர், அவர் பேசியது: தமிழகத்தில் முதல்முறையாக உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெறுகிறது. மகளிர் சுயஉதவிக் குழுவினர் மிக நேர்த்தியாக பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஆனால், அவற்றை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர்.
அதனால், அவர்களுக்கு போதிய அளவு லாபம் கிடைக்காமல் போகிறது. அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நிர்வாகத்திறன் மிக்கவர்கள். அதனால்தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன.
கடன் உதவிபெறும் நிலையிலிருந்து பொருளாதாரம் ஈட்டும் நிலைக்கு சுய உதவிக் குழு பெண்கள் உயர்ந்துள்ளனர். முதல்வரிடம் ஆலோசித்து அனுமதி பெற்று, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேக சுய உதவிக் குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திறன் பயிற்சி, மூலப் பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் என அனைத்து வகைகளிலும் இந்த அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பயனாளர்களின் ஊக்கமிகு வெற்றிக் கதைகள் அடங்கிய வெற்றிக்கதை புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், உற்பத்தியாளர் - சந்தையாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் முதன்மை செயல் அலுவலர் எஸ்.திவ்ய தர்ஷினி தொடக்க உரையாற்றினார். முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா வரவேற்றார். ஆட்சியர் மா.பிரதீப் குமார் அறிமுக உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.