Published : 20 Jun 2023 04:07 AM
Last Updated : 20 Jun 2023 04:07 AM

புனல்காடு குப்பை கிடங்குக்கு எதிர்ப்பு: கிணற்றில் குதித்து 2 பெண்கள் தற்கொலைக்கு முயற்சி

புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்த பெண்ணை கிராம மக்கள் உயிருடன் மீட்டனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் குப்பைக் கிடங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் உள்ள மூலக்குன்று மலையடிவாரத்தில் சுமார் 5 ஏக்கர் இடத்தில், ஆட்சியர் பா.முருகேஷின் அனுமதியுடன் குப்பைக் கிடங்கு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதத்தில் 17 நாள் தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

17 நாட்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை கிராம மக்கள் முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 29-ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் கிராம மக்கள் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இவர்களை, காவல்துறையினர் தடுத்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினரின் தடைகளை தகர்த்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஆட்சியர் பா.முருகேஷுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட தென்மாத்தூரில் உள்ள முகாம் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் கூறும்போது, “மாற்று இடங்களை ஆய்வு செய்து 10 நாட்களில் தேர்வு செய்வது, அதுவரை குப்பைக் கிடங்கு சுற்றுச் சுவர் கட்டும் பணியை நிறுத்தி வைப்பது என அமைச்சர் தெரிவித்தாக” கூறினார். இதனால், 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மாற்று இடம் தேர்வு செய்யப்படும், குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் புனல்காடு கிராம மக்கள் வீடு திரும்பினர். சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், புனல்காடு குப்பைக் கிடங்கில் காவல்துறை பாதுகாப்புடன் சுற்றுச் சுவர் கட்டும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதையறிந்த கிராம மக்கள், குப்பைக் கிடங்கை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த கிணற்றில் புனல்காடு கிராமத்தில் வசிக்கும் குமாரி, நிர்மலா ஆகியோர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இவர்கள் இருவரையும், கிணற்றில் குதித்து கிராம மக்கள் மீட்டனர். பின்னர், 2 பெண்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாது. கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டதால், இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “புனல்காடு கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் தெரிவித்த பிறகும், குப்பைக் கிடங்கு அமைக்கின்றனர். குப்பைக் கிடங்கை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். இதையடுத்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x