தருமபுரி | துயரம் மிக்க சூழலுக்கு இடையிலும் உறுப்பு தானம் அளித்த தொழிலாளியின் குடும்பத்தார்
தருமபுரி: தருமபுரியில் துயரத்தை மறைத்துக் கொண்டு, உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த தொழிலாளியின் குடும்பத்தாருக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கண்ணு. இவரது மகன் தீப்பாஞ்சி(42). ஐடிஐ படித்துள்ள இவர் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். கடந்த 15-ம் தேதி நல்லம்பள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த தீப்பாஞ்சி மீது அவ்வழியே வந்த இருசாக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீப்பாஞ்சி மயக்க நிலைக்கு சென்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தீப்பாஞ்சியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமலே இருந்தது. இந்நிலையில், இன்று(19-ம் தேதி) தீப்பாஞ்சி மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த தகவலை தீப்பாஞ்சியின் குடும்பத்தாரிடம் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்பு தானம் குறித்தும் அவர்களிடம் விளக்கினர்.
இதையேற்றுக் கொண்ட தீப்பாஞ்சியின் குடும்பத்தார் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, தீப்பாஞ்சியின் சிறுநீரகங்கள் இரண்டும் அகற்றப்பட்டு ஒன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, கல்லீரலும் ஈரோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் கார் மூலம் இந்த உறுப்புகள் விரைவாக உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
துயரம் நிறைந்த சூழலிலும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்புதானம் அளிக்க முன்வந்த, தீப்பாஞ்சியின் குடும்பத்தாருக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
