16 செ.மீ மழை, விழுந்த 22 மரங்கள், 127 இடங்களில் தேங்கிய நீர்... - சென்னை கனமழை பாதிப்புகள் | ஒரு பார்வை

சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை
Updated on
3 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், நுங்கம்பாக்கம், மீனாம்பாக்கம் முதலான இடங்களில் 14 செ.மீ. முதல் 16 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சிதான் திடீர் கனமழைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள்கிழமை மாலை வரை சென்னை மாநகராட்சியில் கிண்டி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட 83 இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுடன் சேர்ந்து 127 இடங்களில் மழைநீர் தேங்கியது. வழக்கம்போல், கணேசபுரம் சுரங்கப்பாதையில், நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேங்கிய மழை நீரை அகற்ற சென்னையில் 260 மேட்டார் பம்புகள் தயார் நிலையில் இருந்தது. இவற்றில் பல்வேறு இடங்களில் 12 மேட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டது.

ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள பிரதான சாலையில் 40 ஆண்டு பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 22 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், கமிஷனர் ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், மழைநீர் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ரிப்பன் மாளிகையில் உள்ள, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்புகளை நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்து கூறுகையில், "சென்னையில் பெரியளவில் பாதிப்பு இல்லை. மழைநீர் தேக்கம் தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்துக்கு புகார்கள் வருகின்றன. புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு 232 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மழைநீர் வடிகால் பணி நடைபெறுகிறது. இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிக்கப்படும். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பேருந்து, உட்புற சாலைகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். அதேபோல், பல்துறை சேவை துறைகளால் சேதமடைந்த சாலைகள் மூன்று மாதங்களில் சீரமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கல்வி காரணங்களுக்கான மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து தொலைபேசி வாயிலாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"சென்னையில் இதுவரை பெரியளவு மழை பாதிப்பு இல்லை. தொடர்ந்த அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை உடனடிாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

சென்னை மாநகராட்சியில் மழை - வெள்ள பாதிப்பு தொடர்பாக கண்காணிக்க, 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், சென்னையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில், தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

வானிலை முன்னறிவிப்பு: செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு விடுமுறை - வங்கக்கடல் பகுதிகள்: 20.06.2023-ல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடதமிழக - தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.06.2023 முதல் 23.06.2023 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 19.06.2023 முதல் 23.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in