Published : 19 Jun 2023 05:20 AM
Last Updated : 19 Jun 2023 05:20 AM
சென்னை/திருவாரூர்: திருவாரூரில் நாளை (ஜூன் 20) கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் மற்றும் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழா நாளை (ஜூன் 20) நடைபெற உள்ளது. கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், நூலகத்தை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.25 மணிக்கு விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சாலை வழியாக திருவாரூர் சென்று, அங்கேயே இரவு தங்குகிறார்.
இன்று திருவாரூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சி நிகழ்வுகளில் முதல்வர் பங்கேற்கிறார். பின்னர், நாளை காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் காட்டூர் செல்கிறார். அங்கு கலைஞர் கோட்டம், நூலகம் மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, திருவாரூரில் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், இரவு 11.30 மணிக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு, சென்னை வந்தடைகிறார்.
நினைவிடத்தில் அஞ்சலி
திருவாரூர் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கினார்.
இன்று காலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து, கலைஞர் கோட்டத்துக்கு சென்று திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT