Published : 19 Jun 2023 05:40 AM
Last Updated : 19 Jun 2023 05:40 AM
சென்னை: வள்ளுவர் கோட்டம் போலவே திருவாரூரில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம். ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதியின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்படுகிறது.
திருவாரூரில் அவரது அன்னை அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7,000 சதுரஅடியில், ரூ.12 கோடியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீன தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் கருணாநிதி. திருவாரூரில், தேர் போன்ற வடிவில் வள்ளுவர் கோட்டம் போலவே, அவருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது சிலை, அவரது பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை முத்துவேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் எ.வ.வேலு இப்பணியை சிறப்பான நிறைவேற்றியுள்ளார். விழா ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கவனித்து வருகிறார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா ஜூன் 20-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதீஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும், கருணாநிதி சிலையை நானும் திறந்து வைக்கிறோம். தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மோகன் காமேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையே, கோவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ‘அதிகார மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம்’ என்பதுதான் இக்கூட்டம் விடுத்துள்ள செய்தி. குறுக்கே வரும் தடைகளை தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. இது வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன், ஜூன் 20-ல் திருவாரூரில் நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரளுமாறு கட்சி தொண்டர்களை அழைக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT