Published : 19 Jun 2023 05:52 AM
Last Updated : 19 Jun 2023 05:52 AM
சென்னை: தமிழக குறவர் பெண்களை பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கிய ஆந்திர காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை கடந்த 11-ம் தேதி ஆந்திரா சித்தூர் காவல்துறையினர் அழைத்து சென்றனர். ஒரு வார காலமாக அவர்களை அடைத்து வைத்து, அதில் 2 பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் காவல் துறையினரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது.
எனவே, குறவர் இன பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆந்திர காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், பாலியல் கொடுமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீருதவி நிவாரணமாக தலா ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டும்.
இதேபோல், தென்காசி மாவட்டத்தில், பட்டியலின வகுப்பை சேர்ந்த தங்கசாமி என்பவரை புளியங்குடி காவல்துறையினர் கடந்த 11-ம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர்மீது எவ்வித வழக்கும் இல்லாத நிலையில், விசாரணை என்ற பெயரில் போலீஸார் கைது செய்தது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும் பிணவறையில் வைத்திருந்த தங்கசாமியின் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே தங்கசாமியின் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்திட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT