Published : 19 Jun 2023 08:37 AM
Last Updated : 19 Jun 2023 08:37 AM
ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்டது தொடர்பாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளர் விஜயராமுவை போலீஸார் கைது செய்தனர்.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் முன்கூட்டியே வந்ததால் விழா 2.45 மணிக்கே தொடங்கப்பட்டது. 2.50 மணிக்கு வந்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, `நான் வருவதற்கு முன்பே எப்படி விழாவைத் தொடங்கலாம்' என ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனியை பார்த்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். இதைக் கண்டித்து எம்.பி.யின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ்கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானப்படுத்த ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் முயன்றார்.
அப்போது கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ஒருவர் ஆட்சியரைப் பிடித்து கீழே தள்ளினார். அருகிலிருந்தோர் உடனடியாக அவரை தூக்கிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ஆட்சியரை கீழே தள்ளிவிட்டது நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான விஜயராமு எனத் தெரியவந்தது.
அவர் மீது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அலுவலர் தினேஷ் குமார் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் சாயல்குடி வடக்கு மூக்கையூரைச் சேர்ந்த விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT