Published : 19 Jun 2023 09:17 AM
Last Updated : 19 Jun 2023 09:17 AM

சிறை கைதியாக இருப்பவர் அமைச்சராக தொடர்வது மோசமான முன்னுதாரணம்: இபிஎஸ் விமர்சனம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.

சேலம்: சிறைக் கைதியாக இருப்பவர் அமைச்சர் பதவியில் தொடர்வது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா உட்பட சில நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பங்கேற்றார். இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: அதிமுக எப்போதும் வலுவான கட்சி, யாருக்கும் அடிமை கிடையாது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி மிசா, எமர்ஜென்சியை பார்த்தவன் என்று பேசுகிறார். அந்த மிசா, எமர்ஜென்சியைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான்.

அப்போது, காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட திமுகதான், இப்போதும் காங்கிரஸ் கட்சியிடம் அடிமையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தன்மை உள்ளது. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி தெரியும். அதுவரை அவரவர் கட்சி நலனுக்காக மட்டுமே பேச முடியும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்போல, குதிரைக்கு சேணம் கட்டியதுபோல, ஒரே பார்வையில் இருக்க முடியாது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடக்கும் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் பேசுகின்றன. கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

சிறைக் கைதி எண் வழங்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்னமும் அமைச்சராக தொடர்வது நகைப்புக்குரியது. திமுக ஆட்சியின்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜாவை கருணாநிதி நீக்கினார். அதிமுக ஆட்சியின் போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா நீக்கினார். தமிழகத்துக்கென்று ஒரு அரசியல் நாகரிகம் உள்ளது.

அதை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும். சிறைக் கைதியாக இருப்பவர் பதவியில் தொடர்வது மோசமான முன்னுதாரணமாகிவிடும். அரசியல் நாகரிகம் கருதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதன் அடிப்படையில் நடிகர் விஜய் தன்னுடைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்.

‘நீட்’ வரக்கூடாது என்பதில் அதிமுக முதன்மையாக இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த காந்திச் செல்வன், மத்திய இணை அமைச்சராக இருந்தபோதுதான் ‘நீட்’ தேர்வு வந்தது. ஆனால் அதை பூசி மெழுகி மறைக்கப் பார்க்கின்றனர். இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு வர காரணமாக இருந்தவர்கள் திமுக-காங்கிரஸ் கட்சியினர்தான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x