காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்: பெரிய மீன்கள் வராததால் ஏமாற்றம்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்: பெரிய மீன்கள் வராததால் ஏமாற்றம்
Updated on
1 min read

சென்னை: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால்,பெரிய மீன்கள் வராததால் அசைவபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதிதொடங்கி கடந்த 14-ம் தேதியுடன்முடிந்தது. 61 நாட்கள் நீடித்த இந்த தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, 14-ம் தேதி நள்ளிரவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் புறப்பட்டு சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800 விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

காசிமேட்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள். மீன்பிடிக்க தடை இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மீன் மார்க்கெட்டில் குறைவான கூட்டமே காணப்பட்டது. இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து, முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று அதிக அளவிலான பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து,நேற்று அதிகாலை முதலே காசிமேட்டில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் கூட்டம் அலை மோதியது. ஆனால், குறைந்த அளவிலான விசைப் படகுகளே நேற்று கரை திரும்பியதால் எதிர்பார்த்த அளவு பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறிய வகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடம்பா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிககப்பட்டு இருந்தது. பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விலை குறையவில்லை: இது குறித்து, மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலுக்கு செல்லும் விசைப் படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிப்பார்கள். எனவே அடுத்தவாரத்தில் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவர். அப்போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.விலையும் குறையும் என்றனர்.

நேற்று சிறிய வகை மீன்களே விற்பனைக்கு வந்ததால் அவற்றின் விலையும் அதிகமாக இருந்தது. இதன்படி, காசிமேட்டில் நேற்று வஞ்சிரம் கிலோ ரூ. 950 முதல் ரூ.1,100-க்கும்,சங்கரா ரூ.300 முதல் ரூ.500-க்கும், சிறிய வகை இறால் ரூ.300-க்கும், பெரிய வகை இறால் ரூ.700-க்கும்,வவ்வால் மீன் ரூ.300 முதல்ரூ.600-க்கும், பாறை ரூ.350, நெத்திலி ரூ.150 முதல் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆழ்கடலுக்கு செல்லும் விசைப் படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிப்பார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in