

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கக்கன். இவர் தமிழக அரசில் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரான இவரின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, கக்கன் உருவப்படத்துக்கும், உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சங்கர் மூவிஸ் சார்பாக மேட்டுப்பாளையம் ஜோசப்பேபி தயாரித்து, நடித்து, விரைவில்வெளிவர உள்ள 'கக்கன்' திரைப்படத்தின் விளம்பர போஸ்ட்டரை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கக்கனின் தியாகத்தை போற்றும்வகையில் ஜோசப் பேபி, பெரும் பொருட்செலவில் படம் எடுத்து வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின்எந்த பதவியிலும் இல்லை. கக்கனின் பெயரை சொல்லி அங்கீகாரம் பெற இதுவரை முயற்சிக்கவில்லை.
ஆனாலும் கக்கனை பற்றி திரைப்படம் எடுக்கிறார் என்றால் அவரை பாராட்ட எனக்கு வார்த்தைகிடைக்கவில்லை. அவர் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு விவரங்கள் அனுப்ப இருக்கிறேன். தமிழக பாஜக தொடர்ந்து இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி, சு.வெங்கடேசனை இழிவாக விமர்சித்து, பாஜக நிர்வாகி சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரை கைது செய்தால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவிப்பது வியப்பாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதில் அவசரம் காட்டும்மத்திய அரசு, மல்யுத்த வீராங்கனைகள், பாஜக எம்பி மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, கக்கனின் பேரன் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
த.மா.கா அலுவலகத்தில் தமாகா சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சிதலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கக்கன் பிறந்த நாள் விழாவில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.சக்தி வடிவேல், மாவட்ட தலைவர் ஏ.எஸ்.முனவர்பாட்சா, தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன், மாநில மகளிரணி தலைவி ராணி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, கக்கன்உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.