Last Updated : 12 Oct, 2017 11:25 AM

 

Published : 12 Oct 2017 11:25 AM
Last Updated : 12 Oct 2017 11:25 AM

தமிழக சிறைச்சாலைகளுக்கு மின் கட்டணம் குறைந்தது: மாதந்தோறும் பல லட்சம் சேமிக்கப்படுவதாக தகவல்

மற்ற அரசுத் துறைகளுக்கு வழங்குவது போலவே சிறைச்சாலைகளுக்கும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் மின் செலவு குறைவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 95 கிளைச்சிறைகள் உட்பட 136 சிறைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளாக உள்ளன. இதில் மத்திய சிறைகள், வேலூர் பெண்கள் சிறை, புதுக்கோட்டை இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறைவாசிகளால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சாதாரணமாகவே சிறைகளில் பாதுகாப்பு, பராமரிப்பு, தினசரி பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக மின்சாரம் அதிகளவில் தேவைப்படுகிறது.

தொழிற்கூடங்கள் செயல்படும் முக்கியச் சிறைகளில் மின்சாரத் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் சிறைகளுக்கு மட்டும் வர்த்தக உபயோகத்துக்கான மின் கட்டணத்தை மின்வாரியம் விதித்து வந்தது. அதாவது யூனிட் ஒன்றுக்கு ரூ.8.05 செலுத்த வேண்டியிருந்தது. இதனால் ஒவ்வொரு சிறை நிர்வாகமும் ஆண்டுக்கு பல லட்சங்களை மின்கட்டணமாகச் செலுத்தி வந்தன.

ஆனால், சேவை அடிப்படையிலும், சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலும் சிறையில் தொழிற்கூடங்கள் இயங்கி வருவதால், மின் கட்டண விகிதத்தை குறைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும், சிறைகளில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருட்கள் இதர அரசுத் துறைகளுக்கே அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், கட்டண விகிதம் பெரும் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி வந்தது. மற்ற அரசுத்துறைகளுடன் ஒப்பிடும்போது சிறைத்துறைக்கான மின் கட்டணத்தை மட்டும் வர்த்தக அடிப்படையில் வசூலிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

லட்சக்கணக்கில் குறைந்தது கட்டணம்

இந்த கோரிக்கையை ஏற்று சிறைச்சாலைகளுக்கான மின் கட்டண விகிதத்தை மின்வாரியம் குறைத்துள்ளது. அதாவது, யூனிட்டுக்கு ரூ.8.05 என்று இருந்த கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.6.35 என குறைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு சிறைக்கான மின்சாரச் செலவு லட்சக்கணக்கில் குறைந்துள்ளது. மின்கட்டணக் குறைப்பு நடவடிக்கையால் மிச்சமாகும் நிதி வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, ‘ஆகஸ்ட் மாதம் யூனிட்டுக்கு ரூ.8.05 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்தார்கள். அதன்படி ரூ.6.13 லட்சம் மின்கட்டணம் செலுத்தினோம். செப்டம்பரில் 65,800 யூனிட் மின்சாரம் கோவை சிறையில் பயன்படுத்தப்பட்டது.

யூனிட்டுக்கு ரூ.6.35 என்ற அடிப்படையில் ரூ.4.27 லட்சம் கட்டணம் செலுத்தியிருக்கிறோம். கட்டணக் குறைப்பால் கடந்த மாதம் மட்டும் சுமார் ரூ.1.8 லட்சம் குறைந்துள்ளது’ என்றார்.

மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘அரசுத்துறைகள் என்றாலும், பயன்பாட்டின் அடிப்படையில் மின்கட்டணத்தில் மாறுபாடு இருந்தது. சமீபத்தில் மத்திய, மாநில, கல்வித்துறை, சுகாதாரத் துறைகளில் வசூலிக்கும் கட்டணத்தையே சிறைத் துறையிடமும் வசூலிக்க வேண்டுமென உத்தரவு வந்தது. அதன் அடிப்படையில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்றனர்.

சிறையில் தயாராகும் பொருட்கள்

கோவை சிறையைப் பொறுத்தவரையில் சுமார் 40 விசைத்தறிகள் இயங்குகின்றன. சீருடைப் பணியாளர்களுக்காக மாதம்தோறும் சுமார் 30 ஆயிரம் மீட்டர் சீருடை இங்கு தயாராகிறது. இதுதவிர போலீஸாருக்கான மழைகோட்டு, கொசுவலை, சிறைவாசிகள் சீருடை, கார்பெட் உள்ளிட்டவையும் தயாராகின்றன.

இதேபோல புழலில் விசைத்தறி, சீலிங் வேக்ஸ் போன்றவையும், திருச்சியில் சோப்பு, பேண்டேஜ் போன்றவையும் தயாராகின்றன.

சிறைச்சாலைகளில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் அரசுத் துறைகளுக்கே வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மின்கட்டண குறைப்பு நடவடிக்கையால் மிச்சமாகும் நிதி வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x