

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் தமிழ் மொழிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக் கும் தமிழ் அறிஞர்களைப் பாராட்டும் வகையில் 7 துறைகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு ‘கலைஞர் கருணாநிதி பொற்கிழி’ விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு ஆழ்வார்கள் மைய நிறுவனத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் (புனைக் கவிதை), கலாப்ரியா (நவீன இலக்கியம்), சுப.வீரபாண்டியன் (கட்டுரை), ஆலந்தூர் கோ.மோகனரங்கன் (கவிதை), தீபம் எஸ்.திருமலை (இலக்கியம்), கே.ஜீவபாரதி(இதழாளர்), பி.எல்.ராஜேந்திரன் (சிறுவர் இலக்கியம்) ஆகியோருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ், நினைவுப்பரிசு ஆகியவற்றை வழங்கி ஜெகத்ரட்சகன் பேசிய தாவது:
கருணாநிதி பெயரில் உள்ள இந்த விருதை தமிழ் அறிஞர்களுக்கு வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டுள்ள அவ ரது பேச்சும், எழுத்தும் ஆயுதக்கிடங்கு போன்றது. எழுதுகோலுக்கும், செங்கோலுக்கும் வரலாற்றில் இடம்பெற்றுத் தந்த அவர், தமிழ்மொழிக்கு செம் மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்தார். விண்ணில், மண்ணில் இடம் பிடித்தவர்கள் உண்டு. ஆனால், உலகெங்கும் உள்ள 8 கோடி தமிழர்கள் மன தில் இடம் பிடித்தவர் கருணாநிதி மட்டும்தான்.
பனை ஓலையில் இருந்த தமிழுக்கு பச்சை ரத்தம் பாய்ச்சியவர். ஒரு கோடி பக்கங்கள் எழு திய கருணாநிதி, வெளிநாட்டில் பிறந்திருந்தால் 100 நோபல் பரிசுகளை பெற்றிருப்பார். பன்முகத் திறன்கொண்ட அவரது எழுத்து, பேச்சுக்கு பிறகுதான் அரசியல் குடிசைக்கு வந்தது. தமிழகத்தில் சூழ்ச்சிகள் பெரிய அளவில் சூழ்ந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறி னார்.
திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளரான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, விருதாளர்களை பாராட்டிப் பேசினார். விருது பெற்றவர்கள் சார்பாக பிரபஞ்சன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது, “2 ஆயிரம் ஆண்டுகளாக எழுத்தாளர்களால் இந்த சமூகம் வழிநடத்தப்படுகிறது. எழுத்தாளர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதனால்தான் சமூகம் எழுத்தாளர்களைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக தென்னிந்திய புத் தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். நிறைவில், சங்க செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.