

மாநிலத்தின் முன்னோடித் திட்டமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குறைதீர் மையம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ வெறுமனே அரட்டை அடிப்பதற்காக மட்டுமல்ல; அதன்மூலம் மக்களின் குறையை உட்கார்ந்த இடத்திலிருந்தே தீர்க்க முடியும் என்று நிரூபித்தவர் மதுரை முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.
2012, ஜூன் 28-ல் ‘கலெக்டர் மதுரை’ என்ற பெயரில் ‘பேஸ்புக்’-ல் அன்சுல் மிஸ்ரா தொடங்கிய பக்கம், அவருக்கு மட்டுமன்றி அரசுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த வசதியை கிராமப்புற மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், கிராமப்புற கணினி மையப் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தினர்கூட கணினி மைய பணியாளர்கள் உதவியுடன் ஆட்சியருக்கு ‘பேஸ்புக்’ வழியாக புகார் தெரிவித்தனர். தற்போது ‘கலெக்டர் மதுரை’ பக்கத்தை சுமார் 23 ஆயிரம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் புகார்களைப் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர்.
‘பேஸ்புக்’ பக்கத்தின் வெற்றியைப் பார்த்து, அதைப் போன்ற தொழில்நுட்பத்துடன் மதுரையில் ஒருங்கிணைந்த குறைதீர் மையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ. 75 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே குறைதீர் மையக் கட்டிடம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கியது. கட்டுமானப் பணிகள் மற்றும் உள் அலங்கார வேலைகள் நிறைவடைந்துள்ளன.
ஆட்சியர் இல. சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘கட்டிடப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மக்கள் எளிதாக புகார் தெரிவித்து, அதன் நடவடிக்கை விவரத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் வகையில் ‘பேஸ்புக்’ தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்குத் தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் வாங்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்தவுடன் தற்போது ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் செயல்படும் இந்தப் பிரிவு, இந்த மையத்துக்கு மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார் அவர்.