போடி ரயிலால் கேரள மக்களும் உற்சாகம் : ஐயப்ப பக்தர்களின் சிரமமும் குறைந்தது

போடி ரயிலால் கேரள மக்களும் உற்சாகம் : ஐயப்ப பக்தர்களின் சிரமமும் குறைந்தது
Updated on
1 min read

போடி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், போடி ரயில் சேவை அப்பகுதி மக்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களின் சிரமமும் வெகுவாகக் குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் எல்லை அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, மூணாறு, தேக்கடி, வாகமன், ராமக்கல்மேடு என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

இதனால், இடுக்கி மாவட்டத்துக்கும் தமிழகத்துக்குமான அன்றாடத் தொடர்புகள் மிக அதிகம். விழா, விசேஷம், பண்டிகை, விடுமுறை போன்ற நாட்களிலும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மலை சார்ந்த பகுதியாக இருப்பதால், இம்மாவட்டத்தில் ரயில் வசதி இல்லை. இதனால், ரயில் போக்குவரத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடி வரை ரயில் சேவை கிடைத்துள்ளதால், இவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் போடி வரை வந்து, பின்னர் மூணாறுக்கு எளிதில் செல்ல முடியும். இதேபோல், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் போடி ரயில் பெரிதும் உபயோகமாக உள்ளது.

இந்த ரயிலால் ஐயப்ப பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி - சென்னை ரயிலானது சேலம், காட்பாடி வழியே செல்வதால், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திர மாநில பக்தர்களும் தேனி வந்து, பின்னர் சபரிமலைக்கு சிரமமில்லாமல் பயணங்களை மேற்கொள்ளலாம்.

ஜான் ராஜேந்திரன்
ஜான் ராஜேந்திரன்

இது குறித்து மூணாறை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஜான் ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், "சென்னையிலிருந்து உடுமலைப்பேட்டை வரை ரயிலில் வந்து, பின்னர் வாகனம் மூலம் மூணாறு சென்று வருவோம். தற்போது போடி வரை ரயில் இயக்கப்படுவதால், அங்கிருந்து மூணாறு சென்று வருகிறோம்.

உடுமலைப்பேட்டை பாதையை விட போடிமெட்டு வழியே ஏராளமான பசுமைப் பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இது மனதுக்கு ரம்மியமாக இருப்பதால், போடி ரயிலையே பலரும் பயன்படுத்தும் நிலை உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in