

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பிலிருந்து அகற்றக் கோரி மதிமுக சார்பில் ஜூன் 20-ல் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும், சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மதிமுகவின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மதிமுக 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் தொடங்கி நடத்துகிறது.
தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்.கோவை, கடலூர், தென்சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
கட்சியின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.