

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். இதில் ரயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, புதிய ரயில்கள் அறிவிப்பு, ரயில்களின் நேர மாற்றம் ஆகியவை இடம்பெறும். அதன்படி இந்தாண்டுக்கான, ரயில்வேயின் புதிய கால அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
தெற்கு ரயில்வேயில் வெவ்வேறு மார்க்கங்களில் 44 ரயில்களின் வேகம் கடந்த மார்ச்சில் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை -ரேணிகுண்டா மார்க்கம், அரக்கோணம்-ஜோலார்பேட்டை மார்க்கம், சென்னை-கூடூர் மார்க்கம் ஆகிய வழித்தடங்களில்110 முதல் 130 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விழுப்புரம் - மதுரை வழித்தடத்தில் 110 முதல் 130 கி.மீ. ஆகஅதிகரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் புதிய கால அட்டவணை வெளியிடும்போது, பயணிகளின் கோரிக்கைகள் சேர்க்கப்படும். அதுபோல, நிர்வாக ரீதியமான மாற்றங்களையும் கொண்டு வருவோம். அதன்படி, தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையில் முக்கிய வழித்தடத்தில் ரயில்களின் வேகம் 130 கி.மீ. வரை அதிகரிக்கப்படும். இதனால், பயணிகளின் பயண நேரம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.