

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான ஆவணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் வைத்து கையெழுத்திட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் நடவடிக்கைகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். விசாரணையை அந்த மருத்துவமனையிலேயே தொடர வேண்டும். 23-ம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு, மீண்டும் மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 நாள் காவலில் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு நேற்று முன்தினம் நீதிமன்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். அந்த நேரத்தில் செந்தில்பாலாஜி ஓய்வில் இருந்ததால், அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதற்கான ஆவணத்தை ஒப்படைத்து விட்டு, கையெழுத்து பெற்று சென்றனர்.
நீதிமன்றம் 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்த உடனே, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை அதிகாரிகள் வரவில்லை.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை வரும் 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. எனவே, அவரிடம் விசாரணை முடித்த பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
அமலாக்கத்துறை விசாரணை தொடங்கினால், மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறைத்துறை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, மத்திய காவல் படையின் பாதுகாப்பு அளிக்கப்படும். தற்போது, மருத்துவமனை வளாகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.