Published : 21 Oct 2017 08:30 AM
Last Updated : 21 Oct 2017 08:30 AM

மத்திய பாஜக அரசால் குறைபாடுகளுடன் அமலான ஜிஎஸ்டி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

ஜிஎஸ்டி சட்டம் மத்திய பாஜக அரசால் குறைபாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ‘இளைஞர் நாடாளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:

நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் வலுவான தூண். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள்தான் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கின்றன. நம் நாடு பன்மைத்துவத் தன்மை கொண்டது என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து நாடாளுமன்ற முறையை நம் அரசியல் முன்னோடிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பரவலாக்கப்பட்டு இருக்கும். அமெரிக்கா போல, அதிபர் என்ற ஒற்றை நபரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு இருக்காது. இதனால் தனி நபரோ, ஒரு அரசியல் கட்சியோ நாட்டின் பன்மைத்துவத்தை மாற்ற முடியாது. அதேசமயம், பெரும்பான்மை உறுப்பினர் பலத்தைக் கொண்டு, குறைபாடுகளுடன் கூடிய சட்டத்தைக்கூட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அமல்படுத்த முடியும். பாஜக அரசு அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அதுபோல, குறைபாடு உடைய சட்டமாகும்.

பதில் அளிப்பதில்லை

ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். இந்த நோக்கத்தில்தான், சட்டம் இயற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகள், கேள்விகளை முன்வைக்கின்றனர். அவர்களது கேள்விகளுக்கு அமைச்சர்கள், பிரதமர் பதில் அளிக்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் விவாதத்தில் பங்கேற்று பதில் அளிப்பதே இல்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கும்போதுதான் நாடாளுமன்றம் சிறப்பாக இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் 8 பள்ளி மாணவர்கள், மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவார்கள். இதில் கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் தொடர்பான 5 மசோதாக்கள் அமல்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x