Published : 02 Oct 2017 04:43 PM
Last Updated : 02 Oct 2017 04:43 PM

கருவேல மரம் பற்றி நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

கருவேல மரம் நடுவது பற்றி நான் கொடுத்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

கருவேல மரங்களை நடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து 'தி இந்து' தமிழ் சார்பில் கேட்டபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம் வருமாறு:

கருவேல மரங்களை நடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக நீங்கள் பேட்டி அளித்ததாக செய்திகள் வருகிறதே?

நான் அப்படி எதுவும் பேட்டி அளிக்கவில்லை.

வைகோ பேட்டியின் போது, ”அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருவேல மரங்களை நடுவதாக பேட்டி அளித்ததாக கேள்விப்பட்டேன் அவர் அப்படி சொல்ல வாய்ப்பில்லை அது பற்றி விளக்க வேண்டும்” என்று கூறியிருந்தார், நீங்கள் அப்படி பேட்டி அளித்தீர்களா?

நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை, நான் அளித்த பேட்டி தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றமே தடை செய்த விவகாரத்தில் அப்படி கருத்து சொல்ல முடியாது அல்லவா?

நீங்கள் என்ன பேட்டி அளித்தீர்கள்?

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிற மரம் என்று உயர் நீதிமன்றம் செய்து வருகிறது. கருவேல மரங்களை அரசு அகற்றி வருகிறது. அப்படி கருவேல மரங்களை அகற்றும் இடங்களில் மக்களுக்கு பயன் தரும் என்ன வகையான மரங்களை நடலாம் என்று அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்றுதான் பேசினேன்.

இதைத்தான் நான் பேசினேன். பேச்சு வழக்கில் பேசும் போது அதை தவறாக புரிந்துகொண்டு வெளியில் வந்துவிடுகிறது. இதை எனது விளக்கமாக பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விளக்கத்தை அனைவருக்கும் நான் அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x