

கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 லட்சம் அபராதமும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி புதன்கிழமை தீர்ப்பளித்தார். 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கும்பகோணம் காசிநாதன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 16.7.2004 அன்று காலை 10.30 மணியளவில் சமையல் அறையில் பற்றிய தீ மேலே இருந்த வகுப்பறைகளுக்கும் பரவி 94 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. மேலும், 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 24 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 5.7.2005 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த எம்.பழனிச்சாமி, வட்டாட்சியராக இருந்த எஸ்.பரமசிவம், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ஆர்.கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு ஒவ்வொரு நீதிமன்றமாக மாறிக்கொண்டே இருந்ததால் வழக்கு விசாரணை தடைபட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போதுதான் இந்த வழக்கு இன்னும் முடிவடையாதது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கை இந்த ஆண்டு ஜூலை 31-க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணை ஜூலை 17-ல் முடிவுற்றது. இந்த வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் தீர்ப்பு நாளான புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்போதைய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவ லர்கள் கே.பாலகிருஷ்ணன், மாதவன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) வி.பாலசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் எஸ்.சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே.முருகன் ஆகிய 11 பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி முகம்மது அலி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து மீண்டும் நீதிமன்றம் கூடியபோது மீதமுள்ள 10 பேருக்கான தண்டனைகளை நீதிபதி அறிவித்தார். இதன்படி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு(85) ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 அபராதமும் விதிக்கப்பட்டது. இவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி(81), பள்ளி முதல்வர் சாந்தலட்சுமி(52), சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி(49), சமையலர் வசந்தி(52) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு(70) 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பாலாஜி (68), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் (59), கண்காணிப்பாளர் தாண்டவன்(66), மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் தனி உதவியாளர் ஜி.துரைராஜ் (67) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி முகம்மது அலி தீர்ப்பளித்தார்.
ரூ.52.57 லட்சம் அபராதம்
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் குற்றவாளிகளுக்கு மொத்தம் ரூ.52.57 லட்சம் அபராதம் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி புதன்கிழமை உத்தர விட்டார்.
இதில், பள்ளி நிறுவனரான பழனிச்சாமிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் ரூ.51,65,700, பள்ளித் தாளாளரான சரஸ்வதிக்கு ரூ.700, பள்ளித் தலைமையாசிரியை சாந்தலட்சு மிக்கு ரூ.600, கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு ரூ.50,000, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பாலாஜி, தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு (தலா ரூ.10,000 வீதம்) ரூ.40,000 என மொத்தம் ரூ.52,57,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பெற்றோருக்கு இழப்பீடு மேல் முறையீட்டுக் காலத்துக்கு பின்னர், விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகையிலிருந்து இறந்த 94 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.50,000 வீதமும், படுகாயம் அடைந்த 15 குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதமும், சாதாரண காயமடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.10,000 வீதமும் இழப்பீடாக அளிக்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 357 (3)-ன் கீழ் நீதிபதி உத்தரவிட்டார்.