Published : 03 Oct 2017 10:15 AM
Last Updated : 03 Oct 2017 10:15 AM

சென்னையில் நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு: திமுக உள்ளிட்ட கட்சிகளை அழைக்க முடிவு

மதிமுக சார்பில் நவம்பர் 20-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கட்சிகளை அழைக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித் தார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திராவிட இயக்கத்தின் 101-வது ஆண்டு தொடக்க நாளான நவம்பர் 20-ம் தேதி, சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது, கடந்த செப்டம்பர் 11 முதல் 29-ம் தேதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றிய வைகோவுக்கு பாராட்டு, ஜெனீவாவில் வைகோவை தாக்க முயன்ற சிங்களர்களுக்கு கண்டனம், வைகோவை தாக்க முயன்ற சம்பவத்துக்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும், வைகோவை தாக்க முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கே.பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

திராவிட இயக்கத்தின் 101-வது ஆண்டு தொடக்க நாளான நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற உள்ளது. பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க இருக்கிறோம். திமுகவையும் அழைக்க முடிவு செய்துள்ளோம்.

கோவையில் சுமார் 136 ஏக்கரில் அமைந்துள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடிவிட்டு, நிலத்தை விற்பனை செய்யவும், அந்தப் பணத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்தை நவீனப்படுத்தவும் மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு மாநில உரிமைகள், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் எந்த அக்கறையும் இல்லை. அதனால்தான் விவசாய நிலங்களை அழிக்கும் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து மதிமுக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x