அரசு விழாவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதா?- முத்தரசன் கண்டனம்

அரசு விழாவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதா?- முத்தரசன் கண்டனம்
Updated on
1 min read

திருச்சியில் தமிழக அரசின் சார்பில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக மாவட்டம் முழுவதும் பள்ளிகூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று திருச்சியில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று திருச்சி மாவட்டம் முழுவதும் பள்ளிகூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

அரசின் விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாததோடு, இது மாணவர்களின் படிப்பை பாழாக்கும் செயல் என கருதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

அத்துடன் பயனாளிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் விழா நடக்கும் இடத்திற்கு உரிய நேரத்தில் வந்து சேர வேண்டும் என்றும், தவறுகிறவர்களுக்கு நலத்திட்டங்கள் மறுக்கப்படும் என்றும் மிரட்டபட்டுள்ளது.

திருச்சி நகரம் முழுவதும் 10 அடிக்கு ஒரு விளம்பர பேனர்கள் என ஆயிரக்கணக்கான விளம்பரங்களை செய்யப்பட்டுள்ளது. பிறகட்சிகளுக்கு விதிகளை கட்டாயப்படுத்தும் அரசு, விதிமுறைகளை, சட்டதிட்டங்களை அப்பட்டமாக மீறிஉள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் இத்தகைய அரசு விழாக்களை எதிர்கட்சிகளை தாக்கவும், விமர்ச்சிக்கவும் பயன்படுத்தி கொள்கிறது எடப்பாடி அரசு. இவையாவும் ஜனநாயக அத்துமீறல், ஊதாரி செலவுகள் என்பதனை உணர்ந்து, இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in