

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்து இறந்துபோன மூன்று பேரின் உடலும் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒப்படைக்கப்பட்டது.
போலீஸார் வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாகவும்; ஆளுங்கட்சியினர் உதவியுடன் தங்களை மிரட்டுவதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இசக்கிமுத்துவின் தந்தை கூறும்போது, "எனது மகன் குடும்பத்துடன் தீக்குளிக்கக் காரணமாக இருந்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் எனக் கூறியிருந்தோம். ஆனால், அச்சன்புதூர் காவல்நிலைய போலீஸார் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக எங்களிடம் பொய் கூறி சடலத்தைப் பெற சம்மதம் தெரிவித்ததாகக் கையெழுத்து வாங்கிவிட்டனர். போலீஸார் மிரட்டல் இருப்பதால் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் நெல்லையிலேயே அடக்கம் செய்யவிருக்கிறோம்" என்றார்.
நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை, மனைவி, 2 குழந்தைகளுடன் கூலித் தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டிக் கொடுமையால் இந்த விபரீதச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 6 முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் மனைவியும், 2 பெண் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். கூலித் தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையைக் கண்டித்து போராட்டம்:
இதற்கிடையில், இன்று காலை கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளித்து 3 பேர் பலியான சம்பவத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம், காவல்துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 50 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் முத்துலட்சுமி:
இசக்கிமுத்துவுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த தென்காசி காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், மாமனார் காளி ஆகிய 3 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 306, 511 மற்றும் தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில், முத்துலெட்சுமி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறியதால் முத்துலட்சுமி தென்காசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமாவளவன் கண்டனம்:
திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இசக்கிமுத்துவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமை நிலவுகிறது என்பதற்கு இந்த தீக்குளிப்பு சம்பவமே சாட்சி. கடுமையான சட்டங்கள் இருந்தும் கந்துவட்டிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் நெல்லையில் 47 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளோம்" என்றார்.