

"நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் ஆற்றில் நன்றாக நீந்தி கரையேறுவார்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை நடிகர் கமல்ஹாசன், எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில், இது குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விசிக தலைவர் தொ.திருமாவளவன், "கமல்ஹாசன் தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதையே இன்றைய களப்பணி உணர்த்துகிறது. அவர், கொசஸ்தலை ஆற்றைப் பார்வையிடும் பணியில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது.
கடந்த காலங்களில் திரைத்துறையில் தீவிரமாக பணியாற்றிய கமல்ஹாசன் அதில் முத்திரை பதித்துள்ளார். அதேபோல், அரசியலிலும் அவர் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன்.
நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் ஆற்றில் நன்றாக நீந்தி கரையேறுவா. கமல்ஹாசனுக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு குறித்து, "தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கியிருப்பதையே ரேஷன் சர்க்கரை விலையுயர்வு உணர்த்துகிறது" என்றார்.
மேலும், மயிலாடுதுறையில் விசிகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து வரும் நவம்பர் 3-ம் தேதி விசிக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
பொன் ராதாகிருஷ்ணன் வரவேற்பு:
இதேபோல், கமல்ஹாசன் களத்தில் இறங்கி செயல்பட்டதற்கு பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் ஆய்வு மேற்கொண்டது பாராட்டத்தக்கது.
தமிழகத்தில் கமல்ஹாசன் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டால் டெங்கு ஒழிப்புக்கு உதவியாக இருக்கும்" எனக் கூறினார்.