

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் கழிவுநீரை கண்மாயில் விடுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1,200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். மேலும் அங்குள்ள விடுதிகளில் மாணவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இங்கு செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் மட்டுமே உள்ளது. இங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, வெளியேறும் தண்ணீர் அருகேயுள்ள மரங்களுக்கு விடப்படுகிறது. ஆனால், விடுதிகளில் தங்கியுள்ளோர் குளிக்க, துணி துவைக்க போன்ற தேவைகளுக்காக பயன்படுத்திய பின்னர் வெளியேறும் கழிவுநீர் மற்றும் கேன்டீன்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் கழிவுநீர் அருகேயுள்ள கண்மாயில் விடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கண்மாயின் ஒரு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கிள்ளது. இதனால், சுகாதாரக் கேடு நிலவுவதாகவும், அவற்றை கால்நடைகள் குடிப்பதால் அவற்றுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வாணியங்குடியைச் சேர்ந்த இளையராஜா கூறுகையில், "மருத்துவக் கல்லூரியில் இருந்து கண்மாயில் கழிவுநீர் விடுவதாக ஏற்கெனவே புகார் தெரிவித்தோம். ஆனால், அதைத் தடுக்காமல் கழிவுநீரை தொடர்ந்து கண்மாய்க்குள் விட்டு வருகின்றனர். இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடாக உள்ளது" என்று கூறினார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, "கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க அரசு அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.