

சென்னை: தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இன்று அவரது ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் (முதல் மூன்று இடங்கள்) பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறுகிறது. சென்னை - நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதற்காக நடிகர் விஜய்யின் ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அந்த பகுதியில் அதிகம் வந்துள்ளனர். நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதன் தொடக்கப்புள்ளியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இதற்கு முன்னரும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அது தமிழகம், புதுச்சேரி என இருந்துள்ளது. இந்நிலையில், மிகவும் விமரிசையாக இந்த பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர். இந்த விழாவில் அவரது அரசியல் பார்வை குறித்து விஜய் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் இடம், விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
தனது படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது குட்டிக் கதை சொல்வது, தனது படத்தில் அரசியல் சார்ந்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்துவது என அது இருந்து வந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அடுத்த சில நாட்களில் அவரது பிறந்தநாள் வர உள்ள நிலையில் இது நடைபெறுகிறது.