Published : 17 Jun 2023 05:52 AM
Last Updated : 17 Jun 2023 05:52 AM

தமிழ்நாட்டை சேர்ந்தவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஆதரவு - மதுரை ஆதீனம் தகவல்

மதுரை: தமிழ்நாட்டிலிருந்து யாரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும், அவரை ஆதரிப்போம் என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி, சொத்துகளை அபகரிக்க முயன்றனர். ஆனால், சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் முக்குடியில் உள்ள 1,190 ஏக்கர் நிலம் விரைவில் மீட்கப்படும். அங்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்தியாவில் 3-வது முறையாக மோடியே பிரதமராக வாய்ப்புள்ளது. அவருடைய தமிழ் உணர்வு அதற்குப் பயன்படும். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததைப் பாராட்டும் நோக்கில்தான் செங்கோல் கொடுத்தேன்.

அதேநேரத்தில், தமிழர் பிரதமராக வேண்டும். தமிழ்நாட்டையும் தமிழரே ஆள வேண்டும். இந்தியாவையும் தமிழர்கள் ஆளலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவரை ஆதரிப்போம்.

நான் எந்த அரசியல் கட்சியின் பிரச்சாரத்துக்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து கூறுவேன். பிரதமர்மோடி திருக்குறள், தேவாரத்தை விரும்பிக் கேட்பவர். உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையைக் கொண்டுசெல்கிறார். மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. ஆதீன மடாதிபதியாக இருப்பது முள்மேல் இருப்பதுபோல உள்ளது.

இவ்வாறு மதுரை ஆதீனம் மதுரைஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x