

கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கோவையில் நேற்று நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.
அமலாக்கத்துறையால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நேற்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது: செந்தில்பாலாஜி மிகச்சிறந்த அமைச்சர். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒன்றா, இரண்டா? எல்லோருக்கும் வழக்குகள் வரலாம். அப்படிப்பட்ட வழக்கு அவர் மீதும் பாய்ந்துள்ளது.
கொங்கு மண்டல அமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அநீதியை பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதை மத்திய அரசு உணர வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த போது நடந்த மோசடிக்கு, தற்போது திமுக அரசில் மின்துறை அமைச்சராக இருக்கும் அவரது அறையில் எவ்வாறு அதிகாரிகள் சோதனையிடலாம்? கொங்கு மண்டலத்தின் இன்றைய முக்கிய தலைவர் செந்தில்பாலாஜி. அவரை அப்புறப்படுத்தி விட்டால், 11 எம்.பிக்களை வென்று விடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது. செந்தில்பாலாஜியின் செயல்திறனால் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். பாஜக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மா.கம்யூ. செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இ.கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கூட்டத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.