Published : 17 Jun 2023 07:03 AM
Last Updated : 17 Jun 2023 07:03 AM

அமைச்சரின் கைது நடவடிக்கைக்காக அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க செய்வதா?: வி.கே.சசிகலா கண்டனம்

சென்னை: அமைச்சரின் கைது நடவடிக்கைக்காக அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருப்பதாக வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் வரை சக அமைச்சர்கள், முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள், பேட்டிகள் போன்றவை மூலமாக தமிழக மக்களால் நன்றாக அறிந்து கொள்ளமுடிகிறது. அமைச்சரின் கைது நடவடிக்கையால் அரசு பணிகள் எதுவுமே சரியாக நடைபெறாமல் அரசு இயந்திரமே ஸ்தம்பித்து போயுள்ளது. இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை கூட கவனிக்கவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் என் மீது புனைந்த பொய் வழக்கில் சிறையில் இருந்தபோது, முடிந்தளவு துன்புறுத்தினர். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ உத்தமர்கள் போல் திமுகவினர் நீலிக் கண்ணீர் வடிப்பது விந்தையாக இருக்கிறது.

கடந்த 3 நாட்களாக அரசே கோமாவில் இருப்பதாக தமிழகமக்கள் பேசுகிறார்கள். கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சரை பதவியில் இருந்து நீக்க என்ன தயக்கம் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினைக்கு முதல்வர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்களும் கூடி அமர்ந்து, இதற்கு அரசியல் சாயம் பூசுவதை நிறுத்திக் கொண்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x