Published : 17 Jun 2023 06:34 AM
Last Updated : 17 Jun 2023 06:34 AM
சென்னை: மாநில முதல்வரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: அரசியல் சட்டப் பிரிவின்படி, முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவை உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டபடி, மாநில அமைச்சர்கள் நியமனம், அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்தெல்லாம் தீர்மானிக்க மாநில முதல்வருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடமில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ரவி,ஏற்றுக்கொண்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆளுநர் வெறும் அம்புதான். எனவே, அம்பை எய்தவர்களைதான் விமர்சிக்க வேண்டும். தனது அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வருக்கு உரிமை உண்டு. மரபுக்காகத்தான் ஆளுநரின் கையெழுத்து பெறப்படுகிறது. அமைச்சர்களை முதல்வரே நியமித்துக் கொள்ளலாம். ஆளுநர் ஒத்துழைக்கவில்லை என்றால், அரசும் இதற்கு ஒத்துழைக்காது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழக ஆளுநரின் மலிவான அரசியல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக அமைச்சர்கள் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும், விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? இல்லைஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்ற சந்தேகமும் எழுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT