

சென்னை: பாதுகாப்புத் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்கும் என்று பாதுகாப்பு தொழில்துறை தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் பாதுகாப்பு வழித்தடத்தின் கலந்துரையாடல் கூட்டம், தொழில்துறை அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில் வல்லுநர்கள், பாதுகாப்புத்துறை, ஏவிஎன்எல், டிஆர்டிஓ, சிவிஆர்டிஇ, ஏஐடிஏடி, சென்னை ஐஐடி, எஸ்ஐடியும் ஆகியவற்றின் சார்பில் அதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பாதுகாப்புத் துறையில் தமிழகத்தில் உள்ள குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
லெப்டிெனன்ட் ஜெனரல், கே.எஸ். பிரார், இந்தியாவில் தயாரிப்பு (மேக் இன் இந்தியா) பற்றிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அறிவுசார் சொத்துரிமை மற்றும் வடிவமைப்பின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள பெருவாரியான வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசினார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, ‘‘பாதுகாப்புத் துறையில் உள்ள தேவை மற்றும் இடைவெளியை அரசு புரிந்துகொண்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழில்களுக்கு ஆதரவளிக்கிறோம். மாநிலத்தை நோக்கிய தொழில்களின் பங்குக்கு தமிழக அரசு சிறப்பு முயற்சிகள் எடுக்கும். வரும் 2030-ம் ஆண்டில் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதல்வரின் தொலைநோக்குப் பார்வையை அடையும் பொருட்டு தமிழக அரசு செயல்படும்’’ என்றார்.