

கோவை: அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் நேற்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜியின் கைதைகண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம், கோவை சிவானந்தா காலனியில் நேற்று மாலை நடந்தது. மாலை 5.30 மணிக்கு இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்துக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமை வகித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தொடக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கொமதேக கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பேசினர்.
அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் பேசினர்.
அதன் பின்னர், பொதுக்கூட்டத்தின் இறுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி சிறப்புரையாற்றினார். மாலை தொடங்கிய இந்த கண்டனப் பொதுக்கூட்டம் இரவு 9 மணிவரை நடந்தது.
இப்பொதுக்கூட்டத்தில் கோவை மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். கண்டனப் பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
அந்த வழியாக செல்லும் வாகனங்கள், காவல்துறையினரால் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது. இப்பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.