ஒரே நேரத்தில் ஒரே நடைமேடையில் 2 ரயில்கள் - மதுரை ரயில் நிலையத்தில் தொடரும் குழப்பம்

ஒரே நேரத்தில் ஒரே நடைமேடையில் 2 ரயில்கள் - மதுரை ரயில் நிலையத்தில் தொடரும் குழப்பம்
Updated on
1 min read

மதுரை: மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலையில் புறப்படும் பயணிகள் ரயில்களை ஒரே நடைமேடையிலிருந்து இயக்குவதாலும், பெயர் பலகையிலும் பல ஊர்கள் குறிப்பிடப்பட்டிருப் பதாலும் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6.50 மணி முதல் 8.10 மணிக்குள் ராமேசுவரம், தேனி, செங்கோட்டை, கோவைக்கு தனித்தனியே பயணிகள் ரயில்கள் புறப்படுகின்றன. ராமேசுவரம் மற்றும் தேனி ரயில்கள் 4-வது நடைமேடையின் எதிரெதிர் முனைகளிலும், மற்றொரு நடைமேடையின் எதிரெதிர் திசைகளில் செங்கோட்டை மற்றும் கோவை ரயில்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் தாங்கள் செல்ல வேண்டிய ரயிலைத் தேடி குழப்பமடையும் பயணிகளை மேலும் குழப்பும்விதமாக, ரயில்களில் வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகைளிலும் பல ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக “இந்து தமிழ் திசை” நாளிதழின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட பசுமலையைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது: தினசரி காலையில் மதுரையிலிருந்து புறப்படும் 4 பயணிகள் ரயில்களை ஒரு நடைமேடைக்கு 2 வீதம் அடுத்தடுத்து நிறுத்துவதால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.

சில நேரங்களில் ரயில் மாறி ஏறும் பயணிகள், ரயில் புறப்படும்போது நேர வேறுபாட்டை அறிந்து இறங்க முயற்சிக்கின்றனர். பலர் இறங்க முடியாமல் அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறங்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் முன்கூட்டியே ரயில் நிலையத்துக்குச் சென்றும் திட்டமிட்ட பயணம் மேற்கொள்ள முடியாமல் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். இக்குழப்பத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட ரயில்களை தனித்தனி நடைமேடைகளில் நிறுத்த வேண்டும். அல்லது ஒரு ரயில் புறப்பட்ட பின்பு மற்றொரு ரயிலை நடைமேடைக்குள் கொண்டுவர வேண்டும், என்று கூறினார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்டபோது, பயணிகள் ரயில்களை தனித்தனி நடைமேடைகளில் நிறுத்த இயலாது. ரயில் பெட்டிகளில் உள்ள ஊர் பெயர்களை மாற்றுவது பெரிய பணி. சம்பந்தப்பட்ட நடைமேடைகளில் வேண்டுமானால், பயணிகளுக்கு எளிதில் புரியும்படி விளக்கமான அறிவிப்புப் பலகை வைக்க ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in