

மழைக் காலத்தில் மின்தடை மற்றும் மின் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் மழை காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதை உடனடியாக அவ்வப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழை காலத்தில் மின் தடை மற்றும் இடையூறுகளை சரிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்சாதனங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது அசம்பாவிதங்கள் ஏதேனும் கண்டாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தால் மின்தடை மற்றும் பாதிப்புகள் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.