கோயம்பேடு, சி.எம்.பி.டி., அசோக்நகர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி: இந்தியன் ரயில்வே அதிகாரிகளின் 15 நாள் முக்கிய சோதனை முடிந்தது

கோயம்பேடு, சி.எம்.பி.டி., அசோக்நகர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி: இந்தியன் ரயில்வே அதிகாரிகளின் 15 நாள் முக்கிய சோதனை முடிந்தது
Updated on
2 min read

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக கோயம்பேடு, சி.எம்.பி.டி., அசோக்நகர், ஆலந்தூர் ஆகிய 4 இடங்களில் டூவீலர், கார் பார்க்கிங் வசதி செய்து தரப்படுகிறது. பறக்கும் பாதையில் இரு தூண்களுக்கு இடையே பூச்செடிகள் வைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரத்துக்கான அமைப்பை (ஆர்.டி.எஸ்.ஓ.) சேர்ந்த அதிகாரிகள் குழு மெட்ரோ ரயிலில் 15 நாள் முக்கிய சோதனைகளை நடத்தி முடித்துள்ளது. அக்குழுவின் அறிக்கை வந்ததும் இறுதிக்கட்ட சோதனையாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் சோதனை நடத்துவார் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20,000 கோடி செலவில் இருவழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், கோயம்பேடு – பரங்கிமலை இடையே சாலையின் மையப் பகுதியில் மெட்ரோ ரயில் பறக்கும் பாதை அமைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து அப்பகுதியில் உள்ள சாலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து சாலையின் மையப்பகுதியில் பிரம்மாண்ட தூண்கள் கட்டப்பட்டு மெட்ரோ ரயில் பறக்கும் பாதை அமைக்கப்பட்டது. இப்பணி முழுமையாக முடிந்துவிட்டதால், அந்த சாலை, மீண்டும் நெடுஞ்சாலைத் துறையிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பறக்கும் பாதையில் இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் (சுமார் 60 அடி நீளம், 2 அடி அகலம்) மண் கொட்டி பூச்செடிகள் நட்டு, பராமரிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்துவதற்காக கோயம்பேடு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.) ஆகிய 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்து தரப்படுகிறது.

முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்துக்குத் தேவையான 12 மெட்ரோ ரயில்களும் கோயம்பேடு பணிமனைக்கு வந்து சேர்ந்துவிட்டன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மொத்தமுள்ள 7 பறக்கும் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 80 முதல் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூர பாதையில் இந்தியன் ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரத்துக்கான அமைப்பை (ஆர்.டி.எஸ்.ஓ.) சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகள் குழு கடந்த 15 நாட்களாக மெட்ரோ ரயிலை இயக்குதல் உட்பட பல்வேறு முக்கிய சோதனைகளை மேற்கொண்டனர்.

இச்சோதனைகளை விரிவாக ஆய்வு செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையுடன், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான வடிவமைப்பு, பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்டின் வலுத்தன்மை உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் பெங்களூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு அதிகாரி மிட்டலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நாங்கள் அனுப்பி வைக்கும் ஆவணங்களை அங்குள்ள குழு ஆய்வு செய்யும். பின்னர், வரும் செப்டம்பர் மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரயிலை இயக்கி இறுதிக்கட்ட சோதனை மேற்கொள்வார். அவரது அறிக்கை கிடைத்ததும் முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான தேதி முடிவு செய்யப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in