

சென்னை: செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேநேரம் செந்தில்பாலாஜியை விசாரிப்பதில் அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அவை பின்வருமாறு:
> காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியில் அழைத்து செல்லக் கூடாது.
> நோய்களைக் கருத்தில் கொண்டும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, உடல் தகுதி ஆகியவை குறித்தும் டாக்டர்கள் குழுவினர் தேவையான ஆலோசனையைப் பெற்ற பிறகு விசாரணை மேற்கொள்ளலாம்.
> செந்தில்பாலாஜியின் உடல்நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும்.
> செந்தில்பாலாஜிக்கு போதுமான உணவு மற்றும் தங்குமிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
> விசாரணையின்போது மூன்றாம் நிலை முறையை (3rd Degree Treatment) பயன்படுத்தக்கூடாது.
> எந்தக் கொடுமையையும் ஏற்படுத்தக்கூடாது.
> எந்த அச்சுறுத்தலும் அல்லது வற்புறுத்தலும் செய்யப்படக்கூடாது.
> செந்தில்பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை அமலாக்கத் துறை வழங்க வேண்டும்.
> செந்தில்பாலாஜியை ஜூன் 23ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்.