Published : 16 Jun 2023 03:01 PM
Last Updated : 16 Jun 2023 03:01 PM
சென்னை: "தங்கமணி, வேலுமணி மீதான ரெய்டு நடவடிக்கைகளின்போது அவர்களுக்காக டெல்லி சென்று அமித் ஷா காலில் விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 16) சென்னையில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர்,"முதல்வரின் அறிக்கைக்கு பதில் சொல்ல இயலாத எடப்பாடி பழனிசாமி எதையோ பேசுகிறார் அமலாக்கத் துறை சார்ந்த விசாரணை அதிகாரிகள் போல் பேசியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ரெய்டுகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.எந்த விதமான விசாரணையையும் மேற்கொள்ளுங்கள் என்று எங்களது தலைவரும் கூறியுள்ளார். ஆனால், அத்தகைய விசாரணைகள் மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. விசாரணையின்போது செந்தில்பாலாஜிக்கு குடிக்க தண்ணீர் கூட தரப்படவில்லை. கொஞ்சம் காலதாமதம் செய்திருந்தால் செந்தில்பாலாஜிக்கு என்ன ஆகியிருக்கும்?
செந்தில்பாலாஜி நாடகம் ஆடுகிறார் என்று கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதய நோய் எப்படி வரும் என எல்லோருக்கும் தெரியும். மாரடைப்பு குறித்து தெரியாதவர் எப்படி முதல்வராக இருந்தார். எம்ஜிஆர் எப்படி இறந்தார் என்பதாவது அவருக்குத் தெரியுமா? தன் பேச்சால் மருத்துவமனை அறிக்கையை கொச்சைப் படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முதல்வருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கட்சிக்குள் நாங்கள் எல்லோரும் அண்ணன், தம்பிகள் போல் பழகுகிறோம். மேலும், ஒரு தொண்டனுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டால், நேரில் சென்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. தங்கமணி மீதும், வேலுமணி வீடுகளில் ரெய்டு நடந்தபோது இரவோடு இரவாக டெல்லி சென்று அமித் ஷா காலில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி. திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தவறாகப் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT