

உதகை: நாட்டிலுள்ள தபால் நிலையங்களில் பல்வேறு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான தபால் நிலையங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இயங்குகின்றன.
இதில், தபால் சேவை, பணப் பரிவர்த்தனை, காப்பீடு உட்பட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், எப்போதும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தபால் நிலையங்கள் இயங்குகின்றன.
சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற பெரு நகரங்களில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் தபால் நிலையங்கள் இயங்குகின்றன. சமீபத்தில், இத்திட்டம் கோவை மாவட்டத்திலும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக உதகையிலுள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் செயல்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கு தலைமை போஸ்ட் மாஸ்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இனிவரும் நாட்களில் உதகை தலைமை தபால் நிலையத்தில், வழக்கம் போல் அனைத்து சேவைகளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்படும். காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு ஷிப்டாகவும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு ஷிப்டாகவும் பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையுள்ள ஷிப்டில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள், வரும் காலங்களில் இரவு 8 மணி வரை தபால் அனுப்புவது, பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்" என்றார்.