

மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய சிம்ரன் ஜீத் சிங் மாறுதலாகி சென்னை சென்றார். அவருக்குப் பதிலாக ஆணையராகப் பொறுப்பேற்ற கே.ஜே. பிரவீண் குமார், மாநகராட்சியின் 100 வார்டுகளையும், அங்குள்ள முக்கியப் பிரச்சினைகளையும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதோடு நேரடியாகச் சென்றும் ஆய்வு செய்கிறார்.
மாநகரப் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், போன்ற உயர் அதிகாரிகளை நேரடியாக அழைத்து விவாதிப்பதோடு நிற்காமல் அதே குழுவை நேரடியாக வார்டுகளுக்கு அழைத்துச் சென்று மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் என்னென்ன? என்பதைப் பட்டியலிடுகிறார். பின்னர் அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் புதிய ஆணையர் பிரவீண்குமார் களம் இறங்கியுள்ளார்.
இதற்கு முன்பும் ஆணையர்கள் இதுபோல் பதவியேற்றதும் மக்கள் பிரச்சினைகளை அறிய களம் இறங்கியுள்ளனர். ஆனால், சில காலத்திலே உள்ளூர் அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டை, நெருக்கடி, அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையால் சோர்வடைந்து அதன்பிறகு அறைகளிலே முடங்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் பணிமாறுதல் கேட்டு விரும்பிய இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.
கோவை, சென்னை, திருச்சியைப் போல் நகரங்களை உள்ளடக்கிய மாநகராட்சியாக இல்லாமல் கிராமங்களை உள்ளடக்கிய பெரிய கிராமமாக மதுரை திகழ்கிறது. அதனால், மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஆட்சியராகச் செல்வோருக்குக் கிடைக்கும் அனுபவமும் பெரும் உதவியாக இருந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் இதற்கு முன் பணியாற்றியோர் பெரும்பாலும் ஆட்சியராகவே சென்றுள்ளனர். அதனால், மதுரை மாநகராட்சி ஆணையராக விரும்பிக் கேட்டு வரக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள், அதன்பிறகு விரும்பி இடமாறுதல் பெற்றுச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன.
மதுரை மாநகராட்சியின் தற்போதைய அடிப்படை பிரச்சினை திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. பாதாளசாக்கடை , பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக தோண்டிய சாலைகளை பணிகள் முடித்தும், நிதி ஒதுக்கீடு பெற்றும் புதிய சாலைகளை போடுவற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், சேதமடைந்த சாலைகளைப் பட்டியல் எடுத்து அதனை சீரமைக்க மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மக்கள் வீடுகளில் முடங்கும் அபாயம் ஏற்படுகிறது. அதுபோல், பாதாளசாக்கடை பராமரிப்பு மிக மோசமாக உள்ளது.
குடியிருப்புச் சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் பாதாளசாக்கடை குழிகளில் கழிவு நீர் நிரம்பி தெருக்கள், சாலைகளில் ஆறு போல் ஓடுகிறது. பாதாளசாக்கடைப் பராமரிப்பை கண்காணித்து கழிவு நீர் நிரம்பி வெளியே ஓடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் வாகனங்கள் பழுதால் குப்பைகளை உடனுக்குடன் உரக்கிடங்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
கட்டிட அனுமதி, சொத்து வரி நிர்ணயம், வரி பெயர் மாற்றம் போன்றவற்றில் லஞ்சம் கொடுக்காமல் மக்களால் மாநகராட்சியில் சேவை பெற முடியவில்லை. இலவசமாக இந்த சேவைகளைப் பெற வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி வருவாய்த் துறை உட்பட ஒரு சில பொறுப்புகளில் உதவி ஆணையர்கள், மண்டல அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டும் மைய அலுவலகப் பொறுப்புகளையும் கவனிக்கிறார்கள்.
வேலைப் பழுவால் அவர்களால் இரு அலுவலகங்களுக்கும் தினமும் வந்து அன்றாட அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கப்படும் மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் பொறுப்புக்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க வேண்டும்.
3 ஆண்டுகளில் 3 ஆணையர்கள் இடமாற்றத்தால் இதுபோன்ற இன்னும் பல அத்தியாவசிய, அடிப்படையான மக்கள் பிரச்சினைகளையும், சேவைகளையும் அவர்களால் முழுமையாகச் செய்து கொடுக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வையும், லஞ்சம் இல்லா சேவைகளையும் தடையின்றி கிடைக்க மாநகராட்சியின் புதிய ஆணையரிடம் மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.