Published : 16 Jun 2023 11:09 AM
Last Updated : 16 Jun 2023 11:09 AM

சாலை வசதி இல்லாத எலந்தம்பட்டு மலை கிராமத்தில் இறந்த பெண் உடலை டோலி கட்டி எடுத்து சென்ற துயரம்

உயிரிழந்த சாந்தியை உடலை டோலி கட்டி சுமந்து செல்லும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் எலந்தம்பட்டு மலை கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண் உடலை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு டோலி கட்டி நேற்று சுமந்து சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கானமலை ஊராட்சி எலந்தம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி முருகன். இவரது மனைவி சாந்தி (29). இவருக்கு, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்து சிகிச்சை பெற முடியவில்லை. வீட்டிலேயே கடந்த ஒரு வாரமாக முடங்கி கிடந்துள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மாற்று ஏற்பாடாக இரு சக்கர வாகனத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் மலை கிராமத்தில் இருந்து படவேடு வரை அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர், பேருந்து மூலமாக அழைத்து செல்லப்பட்டு, வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி சாந்தி நேற்று காலை உயிரிழந்தார். வேலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து சாந்தியின் உடல், படவேடு அருகே ஜவ்வாதுமலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது. பின்னர், மலை மீது செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மலை அடிவாரத்திலேயே சாந்தியின் உடல் இறக்கி வைக்கப்பட்டது.

பின்னர், டோலி மூலமாக சாந்தியின் உடலை கிராம மக்களும், உறவினர்களும் எலந்தம்பட்டு கிராமத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “எலந்தம்பட்டு கிராமத்தில் இருந்து மலை அடிவாரத்துக்கு வருவதற்கு சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.

இருப்பினும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை வசதி இல்லாததால், உடனடி சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சாந்தியின் உடல் சுமார் 7 கி.மீ., தொலைவுக்கு டோலி கட்டிக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலை தொடராமல் இருக்க சாலை அமைத்துக் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x