Published : 23 Oct 2017 10:19 AM
Last Updated : 23 Oct 2017 10:19 AM

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக நேற்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகமாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் விளங்குகிறது. இங்கிருந்து 744 விசைப் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும், 300-க்கும் அதிகமான கட்டுமர படகுகளும் இயக்கப்படுகின்றன. இவைகளில் பிடிக்கப்படும் மீன்கள், வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாது, மீன்பிடி துறைமுக வளாகத்திலேயே சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிந்ததால், முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு மீன் சந்தையில், மீன் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். விசைப் படகுகளில் இருந்தும், மீன்கள் அதிக அளவில் கரைக்கு கொண்டுவந்து விற்கப்பட்டன. மக்கள் அதிக அளவில் குவிந்த நிலையில், மீன்களின் விலையும் உயர்ந்து இருந்தது. சுமார் 7 கிலோ கொண்ட வஞ்சிரம் மீன் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இறால் பெரியது கிலோ ரூ.350-க்கும், சிறியது ரூ.160-க்கும் விற்கப்பட்டது. சங்கரா மீன் கிலோ 230-க்கும், 2.5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் ரூ.600-க்கும் விற்கப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால், வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மீன்களை சுத்தம் செய்யவும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x