

சென்னை: திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14 அன்று ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக பொருளாளரும், திமுக எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
ரூ.100 கோடி இழப்பீடு: அதையடுத்து டி.ஆர்.பாலு சார்பில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பாலு சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி என பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக அண்ணாமலை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ரூ.10 ஆயிரத்து 841 கோடி மதிப்புள்ள 21 நிறுவனங்கள் தமக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியிருப்பது தவறானது, அவதூறானது. எனவே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவி்க்கும் வகையில் செயல்பட்ட அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.