

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுகவினரை சீண்டிப்பார்க்க வேண்டாம். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை மூலம் கொடுக்கப்படும் தொல்லைகள், அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகாரைக் கொண்டு, 18 மணி நேரம் அடைத்துவைத்து மன அழுத்தம் கொடுத்து, பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதய நோயை உருவாக்கியுள்ளனர். செந்தில் பாலாஜி மீதான புகாரில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தால், விசாரணை நடத்துவதை தவறு என்று கூறவில்லை. ஆனால், 5 முறை எம்எல்ஏவாக, 2-வது முறையாக அமைச்சராகியுள்ள அவரை, தீவிரவாதியைப்போல் அடைத்துவைத்து விசாரிக்க என்ன அவசியம் உள்ளது?
நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதுபோல, அமலாக்கத்துறையின் நடவடிக்கை இருக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. அமலாக்கத் துறை மூலம் அரசியல் செய்கிறது. கருத்தியல், அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டுவதே பாஜகவின் பாணி.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் சஞ்சய்ராவத், டெல்லியில் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா கைது, பிஹாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியினர் வீடுகளில் சோதனை, கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கைது, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது, தெலங்கானா அமைச்சர் தொடர்புடைய இடங்களிலும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் தொடர்புடைய இடங்களில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிமுகவைப் போல...: ஆனால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் சோதனை நடைபெறாது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்துவார்கள். அல்லது விசாரணை அமைப்புகள் மூலம் அதிமுகவைப் போல அடிபணியச் செய்வார்கள். பாஜக ஆட்சிக்கு முந்தைய 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை 112 சோதனைகளைத் தான் நடத்தியுள்ளது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், எதிர்க்கட்சியினர் இடங்களில் மட்டும் 3 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது 0.05 சதவீதம்தான். மற்ற எல்லா சோதனைகளும் மிரட்டல், உருட்டல்தான்.
தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான அதிமுகவை, தங்களது கொத்தடிமையாக்குவதற்காக 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை நடத்தினர். ஆனால், வழக்கு நடத்தவோ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ, தண்டனை வாங்கித் தரவோ முன்வரவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களில் சோதனை மேற்கொண்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த வராதது ஏன்? நாங்கள் எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீது சோதனை நடத்த தயாரா?
பழனிசாமி தரப்பைபோல, மற்ற கட்சிகளையும் நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுகவினர் பயப்படுபவர்கள் அல்ல. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள். எங்களுக்கென தனித்த அரசியல் கொள்கை, கோட்பாடுகள் உள்ளன. மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு சக்திகளை, அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம்.
திமுகவையோ, திமுகவினரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை. எனவே, மத்திய அரசை ஆளும் பாஜக அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். 2024-ல் நமக்கான தேர்தல் களம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் நாம் இவர்களை சந்திப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.