நீதிபதியின் கேள்விக்கு காணொலியில் பதிலளித்த செந்தில்பாலாஜி - ED வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு

நீதிபதியின் கேள்விக்கு காணொலியில் பதிலளித்த செந்தில்பாலாஜி - ED வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு
Updated on
2 min read

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் ‘அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில்பாலாஜி ‘இல்லை’ என தெரிவித்ததை அடுத்து, மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடந்த வாதத்தில், வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டி உள்ளது என்றும் குறிப்பிட்ட அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அமலாக்க துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கடந்த 13-ம் தேதி காலை 7 மணி முதல் 14-ம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார். மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம் தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் கார்த்திக் தாசரி, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இறுதியாக அமலாக்கத் துறையினர் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில்பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ‘விருப்பமில்லை’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த இரண்டு மனுக்கள் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in