

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குப்பை கொட்ட இடமில்லாததால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. அதிகாரிகளை கண்டித்து ஜூன் 22-ம் தேதி உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் அறிவித்தார்.
தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை காரைக்குடி அருகே ரஸ்தா குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு கொட்டுவதை நிறுத்தினர். பின்னர் குப்பைகளை தேவகோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே கொட்டி வந்தனர். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மாரிச்சான்பட்டி பகுதியில் குப்பைகளை கொட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார்.
தற்போது அங்கும் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் குப்பைகளை கொட்ட முடியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர். வாகனங்களில் அள்ளிய குப்பைகள் அப்படிய தேங்கியுள்ளன. பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பியும் அள்ள முடியாதநிலை உள்ளது. நகர் முழுவதும் துர்நாற்றமும், சுகாதாரக் கேடும் உள்ளது.
இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்றனர். குப்பை கொட்ட இடம் ஒதுக்கி தராத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஜூன் 22-ம் தேதி பொதுமக்களுடன் இணைந்து தியாகிகள் பூங்கா முன்பாக உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் கூறும்போது, ''குப்பை கொட்ட இடம் ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாதநிலை உள்ளது. இதையடுத்து மக்களுடன் சேர்ந்து உண்ணாவிரம் இருக்க முடிவு செய்துள்ளோம். வணிகர் சங்கத்தினரும் கடையடைப்பு செய்வதாக கூறியுள்ளன்'' என்று அவர் கூறினார்.