

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடம் எதற்கும் பயன்படாமல் மூடியே வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அங்கு தற்காலிக சுகாதார நிலையம் செயல்பட ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உள்கட்டுமான பணி வீணாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி நகரில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இறுதி கட்ட அழகுபடுத்தும் பணிகள் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதில், 8 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு இதுவரை பணமும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சமுதாய கூடத்தால் தாராபடவேடு சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மூடியே வைத்திருப்பதால் அங்கிருக்கின்ற பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. யாருக்காக கட்டப்பட்டதோ அவர்களுக்காக பயன்படாமல் உள்ளது.
இதற்கிடையில், தாராபடவேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் தேங்கிய பிரச்சினையால் கழிஞ்சூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து தற்காலிகமாக பாரதிநகர் சமுதாய கூடத்தில் இயங்க நடவடிக்கை எடுத்தனர். அந்த பணியும் கிடப்பில் போடப்பட்டதால் எதற்குதான் இந்த கட்டிடம் பயன்படும் என தெரியாமல் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தை சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தாராபடவேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தினசரி 10 பிரசவங்கள் நடைபெற்றன. 300-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் மருத்துவ பரிசோதனையும், மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். பாரதிநகர், அருப்புமேடு, கஸ்தூரிபாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பயன்பாட்டுக்காக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு தாராபடவேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட முடிவானது. இதற்காக, ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றமும் செய்யப்பட்டது. பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாரதி நகர் சமுதாய கூடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தற்காலிகமாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக, எல் அண்டு டி கட்டுமான நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை, மருத்துவ சிகிச்சை அறை, ஊசி செலுத்தும் அறை, உள்நோயாளிகள் பிரிவுகள் என பிரிக்கப்பட்டு உள் கட்டமைப்பு வசதிகள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த பணி முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யவில்லை. இதற்கான பணிகளை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.