Published : 15 Jun 2023 07:36 AM
Last Updated : 15 Jun 2023 07:36 AM

தெரு நாய்களின் பிடியில் அனகாபுத்தூர்: அச்சத்துடன் நடமாடும் மக்கள்

அனகாபுத்தூர்: தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூரில் மூலை முடுக்கெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலமடங்கு பெருகியுள்ளது. இவை, தெருவில் திடீரென விரட்டுவதால், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இரவு பணி முடிந்து வீடு திரும்புவோர், அதிகாலையில் நடைப்பயிற்சி, பால் போடுவோர், வீட்டு வேலைகளுக்கு செல்வோர் என பலரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழில் உங்கள் குரலில் அனகாபுத்தூரை சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி 1-வது மண்டலம் அனகாபுத்தூர் சஞ்சய் காந்தி நகர், மேட்டு தெரு, கருணாநிதி நகர், எம்ஜிஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், கவுரி அவென்யூ, சாமுண்டீஸ்வரி நகர், பாலாஜி நகர், ராஜீவ் காந்தி நகர், சுப்பிரமணி பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு தெருவிலும் குறைந்தபட்சம், 10 நாய்கள் சுற்றி வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து அச்சுறுத்தி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்களை பிடித்து தனியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஏ.கோவிந்தராஜ் கூறியாதவது: நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு அனகாபுத்தூரில் நாய் கருத்தடை மையம் அமைக்கப்பட்டுள்ளது. புகார் வரும் பகுதிகளில் நேரில் சென்று நாய்கள் பிடித்து கருத்தடை செய்து வருகிறோம். ஒரு ஒரு வாரத்துக்கு 20 நாய்களை பிடித்து அறுவைசிகிச்சை செய்து தடுப்பூசி போட்டு 5 நாட்கள்பாரமாரித்து மீண்டும் பிடித்து இடத்திலேயே நாய்களை விட்டு விடுகிறோம். பொதுமக்கள் புகார் கூறிய அனகாபுத்தூர் பகுதிகளுக்கு விரைவில் நாய் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஏப்.18-ம் தேதி முதல் தனியாக நாய் கருத்தடை மையம் அமைத்து இதுவரை 136 நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம்.
அறுவை சிகிச்சை செய்தபின் நாய்களை மீண்டும் விடும்போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநகராட்சியே நாய்களை பராமரிப்பதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. கருத்தடை செய்யும் நாய்களை மட்டும் 5 நாட்கள் பராமரித்து மீண்டும் பழைய இடத்தில் விடுவதற்கு மட்டுமே வசதி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x